ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிவந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் கீழ் தாக்கி அழித்தது.

இந்த பதிலடி தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் மீது பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் டிரோன் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களை இந்திய பாதுகாப்புப் படையினர் நேர்த்தியான முறையில் எதிர்த்துத் தடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார். “நாம் இங்கு பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில், நமது எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நமக்காக போராடி வருகின்றனர். பயங்கரவாதத்தை ஒழிக்க இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் முயற்சியை நாம் முழுமையாக ஆதரிக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில், நம்முடைய முப்படை ராணுவ வீரர்களுடன் நிச்சயமாக நாம் துணை நிற்க வேண்டும்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.