பத்ம பூஷன் விருது பெற்ற பிறகு ANI ஊடகத்துடன் பேசிய நடிகர் அஜித் குமார், “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களை நினைத்து மனம் உடைகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன். அரசாங்கம் தங்களால் முடிந்த சிறந்த பணியை செய்து வருகிறார்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் வேற்றுமைகளை புறக்கணித்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும்.

இன்று (ஏப்ரல் 28) ஆயுதப்படை வீரர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் செய்த தியாகங்களை நினைத்து நாம் அவர்களை மரியாதையுடன் போற்ற வேண்டும். அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதால்தான் நாம் நிம்மதியாக வாழ முடிகிறது. அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என என் இதயம் ஆசைப்படுகிறது.
நமது எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் பணியை மதித்து, நம்முள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் நம் நாட்டுக்குள் சண்டைகள் இல்லாமல், நாம் அமைதியான சமூகமாக வாழ வேண்டும்” என்று கூறினார்.