ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஷைல்குமார் தயாரித்து, சங்கர் சாரதி இயக்கியுள்ள ‘வள்ளுவன்’ திரைப்படத்தில் சேத்தன் சீனு மற்றும் ஆஷ்னா சவேரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடந்த இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஆஷ்னா சவேரி பேசுகையில், “இது எனக்குப் மிகவும் முக்கியமான படம். இது உணர்ச்சிகரமானதும் திருப்பங்கள் நிறைந்ததும் ஆகும். எனக்கு ரசிகர்களின் மனம் நிறைந்த ஆதரவு மட்டுமே வேண்டும். என்னை பொறுத்தவரை, ‘டிக்கெட் காசு வீணாகவில்லை’ என்ற உணர்வை ரசிகர்கள் பெற வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் தான் நான் நடித்து வருகிறேன்; இதுவும் அப்படிப்பட்ட படம் தான்,” என்று கூறினார்.
அதே நிகழ்வில் நடிகை கோமல் சர்மா, “திருக்குறள் என்பது உலகிற்கு ஒளி தந்த படைப்பு. ஒரு மாதத்திற்கு பத்து குறள்களைக் குழந்தைகள் மனப்பாடம் செய்தால், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாகவும் உணர்வுமிக்க தலைவர்களாகவும் உருவாக முடியும். அதற்காக பெற்றோர் இதனை ஊக்குவிக்க வேண்டும்,” என்றார்.


 
