நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அவரின் முழுஉருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

சிலைக்கு, அவரது மகனும் நடிகருமான பிரபு மற்றும் பேரனான விக்ரம் பிரபு ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, “சிவாஜி கணேசன் நம்மை விட்டுச் சென்று 24 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும், அவரது ரசிகர்களை பார்த்தால் அவர் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று உணர முடிகிறது. இன்று கூட பலரது வீடுகளில், அவரை குடும்ப நண்பர், சகோதரர் போன்ற வகையில் நினைவுகூர்ந்து வருகிறார்கள். என் தந்தை எப்போதும் ரசிகர்களை ‘இதயங்கள்’ என்று அழைப்பார். அவருடைய இதயங்களாகிய உங்களுக்கெல்லாம் என் நன்றிகள். என் தந்தையின் கடைசி மூச்சை நாங்கள் இன்னும் சுவாசிக்கிறோம். அதுதான் இந்த ரசிகர்கள்” என்று கூறினார்.