கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லேன் நடிப்பில் வெளியான லோகா: சாப்டர் 1 – சந்திரா திரைப்படம் உலகளவில் ரூ.101 கோடிக்கும் மேற்பட்ட வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால், வசூல் வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான், நான் இப்படத்தில் நடிக்கவில்லை, ஆனால் ஒரு ஆசிரியராக மாணவர்களை வழிநடத்துவதைப் போல இதை உருவாக்கினேன். இப்போது கேரளா மட்டுமின்றி எல்லா இடங்களிலிருந்தும் பாராட்டுகள் கிடைக்கின்றன. இதில் உழைத்த அனைவரும் தங்கள் சொந்தப்படம் போல உழைத்தனர். இந்த வெற்றி அவர்களுக்கே உரியது. கல்யாணியைத் தவிர வேறு யாரும் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்க முடியாது. கதை சொன்ன மறுநாளே அவர் டிரெய்னிங் தொடங்கிவிட்டார். எங்களின் எதிர்பார்ப்பை விட சிறப்பாக நடித்துள்ளார். இந்தப்படத்தை தமிழ்ப் படம் போல டப்பிங் செய்து கொடுத்த பாலா சாருக்கு நன்றி. இவ்வளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை.
இப்படத்தை ஐந்து பாகங்களாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். நான் பல படங்களில் நடித்திருந்தாலும், இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தனித்துவமானது. அதற்கான மரியாதையாக உடனடியாக அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க உள்ளோம். லோகா போலவே மேலும் புதிய படங்களையும் வழங்குவோம். என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. சினிமா மீது உள்ள காதலால், என் பேனரில் மற்ற நடிகர்களும் நடிக்கும் படங்களையும் தொடர்ந்து தயாரித்து வருகிறோம்” என்றார் துல்கர் சல்மான்.