சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப், வாணி கபூர் நடித்த வார் திரைப்படம் 2019 இல் ஹிந்தி மற்றும் பல மொழிகளில் வெளியானது. 475 கோடி ரூபாய் வசூலித்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பின், அதன் அடுத்த பாகமான வார் 2 திரைப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதை, பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். ஹிந்தியுடன், தமிழ் மற்றும் தெலுங்கிலும் இது வெளியானது.

இந்தப் படத்தின் கதைப்படி, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளின் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், செல்வாக்கு வாய்ந்தவர்கள் இணைந்து ‘கலி’ என்ற ரகசிய அமைப்பை உருவாக்குகிறார்கள். இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க பல சதிகள் தீட்டுகின்றனர்; பிரதமரை கொல்லும் திட்டமும் அதில் ஒன்று. இதனைத் தடுக்க ரா (RAW) பிரிவு அதிகாரிகளான ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி ஆகியோர் முயலுகிறார்கள்.
ஹிருத்திக் ரோஷன், ரா அமைப்பிலிருந்து விலகி, கலி அமைப்பில் இணைகிறார். ஒரு ரா அதிகாரியை கொல்கிறார். இதனால், அவரை பிடித்து, கலியின் திட்டத்தை முறியடிக்க ரா பிரிவு ஒரு ஆபரேஷனைத் தொடங்குகிறது. அதில், இளம் அதிகாரியான ஜூனியர் என்.டி.ஆரும், ரா தலைவர் அசுதோஷ் ராணாவின் மகளான கியாரா அத்வானியும் இணைகிறார்கள். இவர்களை அனில் கபூர் வழிநடத்துகிறார்.
ஹிருத்திக் ரோஷன் தனது குருவான அசுதோஷ் ராணாவை ஏன் கொன்றார்? சிறுவயது நண்பர்களான ஹிருத்திக், ஜூனியர் என்.டி.ஆர் ஏன் பிரிந்தார்கள்? ஜூனியர் என்.டி.ஆர், ஹிருத்திக்கை ஏன் கொல்ல முயற்சிக்கிறார்? ஹிருத்திக் மற்றும் கியாராவின் காதல் வெற்றி பெற்றதா? கலி அமைப்பின் இறுதியான நோக்கம் என்ன? — இவை அனைத்தையும் இயக்குநர், ஜேம்ஸ் பாண்ட் பாணியில் நிறைந்த ஆக்ஷன், சுவாரஸ்யம், கவர்ச்சி மற்றும் தேசப்பற்று கலந்த விதத்தில் வடிவமைத்துள்ளார்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், வெளிநாடுகளில் நடக்கும் கார் சேசிங், விமானப் போர், படகு சண்டை, பனிமலைக் கிளைமாக்ஸ் போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன. ஹிருத்திக் ரோஷனின் உடலமைப்பு, பேச்சு, நடிப்பு, ஆக்ஷன், டான்ஸ் அனைத்தும் சிறப்பாக உள்ளன.ஜூனியர் என்.டி.ஆரும், ஆக்ஷன், டான்ஸ், மற்றும் கிளைமாக்ஸில் உணர்ச்சிகரமான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். இரு ஹீரோக்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கியாரா அத்வானிக்கு சண்டைக் காட்சி, கவர்ச்சியான பாடல் காட்சி மற்றும் பிரதமரை காக்கும் முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது. அசுதோஷ் ராணா, அனில் கபூர் ஆகியோரும் தங்கள் நடிப்பால் கதையை வலுப்படுத்தியுள்ளனர். ஆக மொத்தத்தில் வார் 2 நிச்சயமாக ஒருமுறை ஆக்சன் த்ரில்லர் விரும்பிகள் ரசிக்க கூடிய படம்தான்.