தமிழ் திரைப்படத்துறையில் 1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ‘வாழ்க்கை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் வைஜெயந்திமாலா. அதன் பின்னர், ‘இரும்புத்திரை’, ‘பார்த்திபன் கனவு’, ‘தேன் நிலவு’, ‘பாக்தாத் திருடன்’, ‘சித்தூர் ராணி பத்மினி’ போன்ற காலத்தால் அழியாத வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் ‘கண்ணும் கண்ணும் கலந்து…’ என்ற பாடலுக்கு ‘நாட்டிய பேரொளி’ பத்மினியுடன் இணைந்து ஆடிய போட்டி நடனம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த பாடல், தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற நடனக் காட்சிகளில் ஒன்றாக இன்று வரை மக்களின் மனதில் நிலைத்து இருக்கிறது.
சென்னையில் பிறந்து வளர்ந்த வைஜெயந்திமாலா, சினிமாவை தாண்டி அரசியலிலும் தடம் பதித்தவர். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.யாக பணியாற்றிய அவர், பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷண்’ விருதைப் பெற்றதன் மூலம், தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளார்.கலை மற்றும் அரசியல் மட்டுமின்றி, நடனத்திலும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு, அயோத்தியில் பரதநாட்டியம் ஆடிய 90 வயது வைஜெயந்திமாலாவின் நடனத் திறனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இந்நிலையில் இவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து வைஜெயந்தி மாலா நலமாக உள்ளார். வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.