விலாயத் புத்தா படத்தில் மறையூர் கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் பஞ்சாயத்து தலைவராக மதிப்போடு வாழும் ஷம்மி திலகனின் வாழ்க்கையே கதையின் மையம். நேர்மைக்கும் சுத்தத்திற்கும் பெயர் பெற்ற அவர், தவறுதலாக செப்டிக் டேங்கில் விழுந்ததில் ஏற்பட்ட அவமானம் காரணமாக பதவிக்கு ராஜினாமா செய்து வீட்டிலேயே முடங்கி விடுகிறார். தனது வீட்டில் உள்ள விலையுயர்ந்த சந்தன மரமான விலாயத் புத்தாவை மரணத்திற்கு பிறகு தன்னை எரிக்க வேண்டுமென நினைக்கும் அவர், அதை எப்படியும் வாங்கி போக்க விரும்பும் சந்தன வியாபாரி பிரித்விராஜ் என்பவருடன் மோதலுக்கு வருகிறார். வாத்தியாரிடம் பழைய மனக்கசப்பு கொண்ட பிரித்விராஜ் அந்த மரத்தை அதிக விலை தருவதாக சொல்லியும் வாங்க முடியாத நிலையிலிருந்து, எந்த விதத்திலும் அதை வெட்டவேண்டும் என முடிவு செய்கிறார். இந்த மனவெறுப்பும் ஈகோ மோதலுமே கதையை கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது.

பிரித்விராஜ் மலைவாசி சந்தன வியாபாரியாக, கருமை படிந்த முகம், கைலியுடன் டபுள் மோகனன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக காட்சி தருகிறார். வாத்தியாரிடம் பழி வாங்க வேண்டும் என்ற தீவிரம், புத்திசாலித்தனமாக சூழ்நிலைகளை சாதகமாக மாற்றும் அவர் குணநலன்கள், காதலிக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கும் மனநிலை—ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஆற்றல் தெளிவாக தெரிகிறது. குறிப்பாக ஷம்மி திலகனுடன் நடக்கும் இரவுக் காட்சி இருவருக்கும் நடிக்கும் திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உணர்ச்சியிலும் ஆழ்த்துகிறது.
இதுபோலவே, திலகனின் மகனான ஷம்மி திலகன் இந்த படத்தின் முதுகெலும்பு. சாக்கடையில் விழுந்த பிறகு தினசரி அனுபவிக்கும் மன வேதனை, தனது சந்தன மரத்தை காக்க துப்பாக்கியுடன் வீட்டு வாசலில் விழித்திருக்கும் காட்சிகள், மரம் பறிபோய்விடுமோ என்ற பதட்டம்—இவை அனைத்தையும் அவர் அசத்தலாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் அவரை மறுபடியும் நடிகராக அடையாளப்படுத்தும் வகையில் மிக வலுவானது.
எழுத்தாளர் இந்து கோபன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் ஜெயன் நம்பியார் இந்த படத்தை மிக கவனமாக இயக்கியுள்ளார். சந்தன மர கடத்தல் கதைகள் வழக்கமான பாதையிலே சென்றாலும், ஹீரோவும் எதிர்ப்பாளரும் இருவரும் நல்லவர்களாக இருக்கும் சூழ்நிலையில் உருவாகும் மோதலை கத்தி மேலே நடப்பது போல் நுட்பமாக கையாண்டுள்ளார். ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் கூட பிரித்விராஜ் மீது கோபம் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்ற சிறு குறை இருந்தாலும், விலாயத் புத்தா ரசிகர்களை ஏமாற்றவில்லை என்பது நிச்சயம்.

