ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் இயக்கிய ‘கோலி சோடா’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, ‘10 எண்றதுக்குள்ள’, ‘கடுகு’, ‘கோலி சோடா 2’, ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இந்நிலையில், விஜய் மில்டன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தை ரப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்ற தலைப்பே இடப்பட்டுள்ளது.
படம் குறித்தும் தனது அனுபவத்தையும் பகிர்ந்த விஜய் மில்டன், “இந்த படம் எனக்கு மிகவும் முக்கியமானது. இது ‘கோலி சோடா’ படத்தின் பாணியில் ஒரு வலிமையான, உணர்வுபூர்வமான, உண்மையான கதையை கொண்டிருக்கும். ராஜ் தருண் இதில் மிகச் சிறப்பாக, இளமையாகவும் உற்சாகமாகவும் நடித்துள்ளார். அவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்,” எனத் தெரிவித்தார்.