நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் காதலில் உள்ளனர் என்ற செய்தி பல ஆண்டுகளாக திரையுலகில் பரவி வருகிறது. இந்தக் காதல் குறித்த வதந்திகளை இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, பொது விழாக்களிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். கூடுதலாக, இருவரும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி ஒன்றாகச் சுற்றுலா செல்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் இணைந்து பங்கேற்றனர். அங்கு இருவருக்கும் கிராண்ட் மார்ஷல்கள் என்ற சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. விழாவில் இந்திய தேசியக்கொடியை ஏந்தியபடி விஜய் தேவரகொண்டா கிரீம் நிற குர்தா-பைஜாமாவில் கலந்துகொண்டார்; ராஷ்மிகா சுடிதாரில் பங்கேற்றார்.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது நியூயார்க் எம்பயர் கட்டிடம், இந்திய தேசியக் கொடியின் மூவர்ண ஒளிவிளக்குகளால் பிரகாசமாக ஒளிர்ந்தது. அந்த விளக்குகளை விஜய் தேவரகொண்டா திறந்து வைத்தார். அப்போது அவர், “எம்பயர் கட்டிடத்தில் நமது தேசியக் கொடியின் மூன்று வர்ணங்கள் ஒளிர்வதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நமது நாட்டின் பெருமையை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உலகம் முழுவதும் காட்டி வருகிறார்கள். இந்தியாவுக்காக அவர்கள் செய்கிற முயற்சிகளைப் பார்ப்பது பெருமையளிக்கிறது” என்று கூறினார். நியூயார்க்கில் நடைபெற்ற அந்த சுதந்திர தின அணிவகுப்பில் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் சேர்ந்து பங்கேற்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.