அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விழாவில் பேசியிருக்கும் ஜி.வி.பிரகாஷ், “வெற்றிமாறன் என்னோட அம்மா மாதிரி. நடிக்கணும், தயாரிக்கணும்னு நான் என்ன சொன்னாலும் ‘அதெல்லாம் எதுக்குன்னு, அதில் இருக்கும் ஆபத்துகளைச் சொல்லி எச்சரிப்பார்’. ஆனால், முழுமையாகத் துணை நின்று வழிநடத்துவார். என் அம்மாவும் அப்படித்தான். ‘வாடிவாசல்’ படத்தின் வேலை ஆரம்பிச்சாச்சு. 18 வருஷமாக நானும் அவரும் சேர்ந்து பயணிச்சிட்டு இருக்கோம்.

இந்தப் படம் நம்ம ஊர் ‘ஹாரிபாட்டர்’, ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ மாதிரி இருக்கும்னு நம்பிக்கை இருக்கு. ஏன் நம்ம ஊர்ல அப்படியொரு படம் வரக்கூடாது? நம்ம ஊர் பசங்க இந்தப் படத்துக்கு VFX, கிராபிக்ஸ் வேலைகள் பார்த்திருக்காங்க. இந்தியாவே திரும்பிப் பார்க்கிற மாதிரி இருக்கும் இந்தப் படத்தோட காட்சிகள். இந்தப் படத்தை அடுத்தடுத்த சீரிஸ் எடுக்கும் அளவிற்கு வரவேற்பைப் பெறணும். அதுல அவ்வளவு விஷியம் இருக்கு. நம்ம சினிமாவ பார்த்து ஹாலிவுட் காரங்க வியக்கணும் கடுமையாக உழைச்சிருக்கோம். நல்ல வரவேற்பைக் கொடுங்கள்” என்று பேசியிருக்கிறார்.