முன்னணி நடிகர் நாகேஷின் பேரனான கஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘உருட்டு உருட்டு’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடிக்கிறார். ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில் சாய் காவியா, சாய் கைலாஷ் மற்றும் பத்மராஜு ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன் மற்றும் அங்காடித்தெரு கருப்பையா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை யுவராஜ் பால்ராஜ் செய்துள்ளார். இசையை அருணகிரி அமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் கூறும்போது, “சுமார் 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற விளம்பரம் பிரபலமாக காணப்பட்டு வந்தது. அதன் பின்னர் அது ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என மாறியது. ஆனால் தற்போது அந்த வகையான விளம்பரங்களை எங்கேயும் காண முடியவில்லை. அதற்குப் பதிலாக, குழந்தை பெற வேண்டுமா என்கிற தலைப்புகளுடன் கருத்தரிப்பு மையங்களின் விளம்பரங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. இவ்வாறான மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பதை நகைச்சுவை கலந்து, இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துரைக்கிறோம்” என்றார்.