இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கியுள்ள படம் ‘வருணன்’. இதில் நடிகர் ஜெயப்பிரகாசின் மகன் துஷ்யந்த் கதாநாயகனாகவும், கேப்ரியல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ராதாரவி, சரண்ராஜ், ஜீவா ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார், ஶ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் மற்றும் வான் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படம் மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் அன்புச்செழியன் பாடல்களை வெளியிட்டார்.

படத்தை பற்றிப் பேசிய இயக்குநர் ஜெயவேல் முருகன், “இது ஒரு தனித்துவமான கதையம்சம் கொண்ட படம். தண்ணீரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். கதையின் பின்னணி வடசென்னை. இதில் ராதாரவி, ‘ஆண்டவர் வாட்டர் சப்ளை’ எனும் பெயரில் மதுரையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கேன் விநியோகிக்கும் வணிகராக நடிக்கிறார். சரண்ராஜ், ‘ஜான் வாட்டர் சப்ளை’ எனும் நிறுவனத்தை நடத்தும் சென்னையில் பிறந்த ஒருவராக நடிக்கிறார். இவர்களுக்கு இடையில் ஏற்படும் மோதலே படத்தின் முக்கியக் கரு.
தண்ணீரை வியாபாரமாக மாற்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை கதையின் மூலம் செவ்வனே சொல்லியிருக்கிறோம். இதில் வருண பகவானாக சத்யராஜ் குரல் கொடுத்துள்ளார், ஆனால் அவர் திரையில் தோன்றவில்லை. கதையை கேட்டவுடன் அவர் உடனே குரல் கொடுக்க ஒப்புக்கொண்டார். மேலும், தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் படம் வெளிப்படுத்தும்”** என்றார்.