ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘வாரணாசி’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பை மிகப் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் வெளியிட்டனர். அதற்காக உலகம் முழுவதிலிருந்தும் சில முக்கிய ஊடகங்கள் சிறப்பு அழைப்புடன் அழைக்கப்பட்டிருந்தன.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, படக்குழு உடனடியாக புரமோஷன் பணிகளைத் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த ஊடகங்களுக்கு ராஜமவுலி, மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் பேட்டிகள் வழங்கி வருகின்றனர். இந்த புரமோஷனுக்காக ஹாலிவுட்டைச் சேர்ந்த ஒரு தனி ஏஜென்சியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் உதவியுடன் படத்தை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
பேட்டிகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா, “தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் இந்த இரு ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுவதும், எஸ்.எஸ். ராஜமவுலி படத்தில் சேர்வதும் மிகப் பெரிய பாக்கியம். எங்கள் படத்தை வெளியீட்டிற்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சர்வதேச ஊடகங்களுடன் புரமோஷன் செய்வது கூடுதல் உற்சாகத்தை தருகிறது. அவர்களின் எதிர்வினைகளைப் பார்ப்பதும், படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதையும் காண்பதும் மகிழ்ச்சி தருகிறது.கடவுளின் அருளால், உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம். ஜெய் ஸ்ரீ ராம் என பதிவு செய்துள்ளார்.

