செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படத்தில், ‘மிஸ்டர் பச்சன்’ புகழ் நடிகை பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இதில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்த படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் முதலில் கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக இருந்தது. ஆனால் அப்போது துல்கர் சல்மான் தயாரித்த ‘லோகா’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்ததால், ‘காந்தா’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோவின் மூலம் அறிவித்துள்ளது. டிரெய்லர் வரும் 6ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

