சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவான படம் ‘இரவின் விழிகள்’. இதில் கதாநாயகனாக மகேந்திரா நடித்து உள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் சிக்கல் ராஜேஷ், கதாநாயகியாக நீமாரே, நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதிகும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர சந்திரபாபு, கிரி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.எம்.அசார். மகேந்திரா பிலிம் பேக்டரி தயாரித்த இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகை நீமாரே பேசுகையில், “படப்பிடிப்பில் சில காட்சிகள் திருப்தி அளிக்கவில்லை என்றால் கூட, படப்பிடிப்பு முடிந்து இரண்டு வாரங்கள் கழித்த பிறகும் என்னை அழைத்து சில காட்சிகளை மீண்டும் படமாக்கினார். ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்து ‘இரவின் விழிகள்’ படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்புக்கு முன்பு இயக்குனர் ராஜேஷ் அம்பி போலவும், படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு அந்நியனாகவும் மாறுவார்” என்று கூறினார்.
நடிகை கோமல் சர்மா பேசுகையில், “இன்றைய இளைஞர்களின் போர்க்களமே வேறு. அது துப்பாக்கியோ வாளோ அல்ல; ஒரு போஸ்ட், ஒரு டுவீட், ரீல்ஸ் இதுவே. உங்கள் கையில் இருக்கும் செல்போன் ஒரு வழிகாட்டி. சில பாலோவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழிக்காதீர்கள். உங்கள் குரலை நாட்டுக்காகவும், காட்டுக்காகவும் பயன்படுத்துங்கள். குரல் இல்லாத குழந்தைகளுக்கு குரலாக மாறுங்கள்” என்று அவர் தெரிவித்தார்.