மணிரத்னம் இயக்கிய ‘தக் லைப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. இதில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாக விமர்சிக்கப்பட்டதுடன், பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. பலரும் இந்த நிலைமைக்கு காரணமாக குழப்பமான கதையைச் சுட்டிக்காட்டியிருந்தனர்.இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்தை பார்த்து தனது விமர்சனத்தையும் பாராட்டுதலையும் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், “தக் லைப் படத்தை பார்த்தேன். அது என்னை முழுமையாக வியப்பில் ஆழ்த்தியது. இது ஒரு மிகச் சிறந்த திரைப்படம். ஆனால் சிலர் ஏன் இந்த அளவுக்கு மோசமாக விமர்சிக்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை. இதே படம் ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்த ஆங்கிலப் படம் ஆக இருந்திருந்தால், நாம் அதை புகழ்ந்து தள்ளியிருப்போம். இப்படத்தில் ஆழமான கதையும், அதிர்வலைகள் ஏற்படுத்தும் காட்சிகளும், உலகத் தரம் வாய்ந்த ஒளிப்பதிவும், பின்னணி இசையும், சிறந்த நடிப்பும், எடிட்டிங்கும் உள்ளன. ஒருங்கிணைக்கப்படாததெனச் சொல்லக்கூடிய காட்சிகள் எதுவுமில்லை” என தெரிவித்துள்ளார்.