தமிழ் திரைப்படத்துறையில் ஒரு நடிகர் கதாநாயகனாக 25 படங்களை தொடர்ந்து பூர்த்தி செய்வது சாதாரண விஷயமல்ல. அழகும் திறமையும் இருந்தபோதும், சிலர் குறுகிய காலத்திலேயே மறைந்து போகும் நிலை தொடர்கிறது. ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் மூன்று முக்கிய நடிகர்கள் ஒரே நேரத்தில் தங்களது 25வது படத்தை முடிக்கவிருப்பது ஆச்சரியத்திற்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய மூன்று நடிகர்களின் 25வது படங்கள் குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இதில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக பராசக்தி, ஜிவி பிரகாஷ்குமாரின் 25வது படமாக கிங்ஸ்டன், மற்றும் விஜய் ஆண்டனியின் 25வது படமாக சக்தித் திருமகன் ஆகியவை முடிவாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் 2012ஆம் ஆண்டு மெரினா படத்தின் மூலம், ஜிவி பிரகாஷ் 2015ஆம் ஆண்டு டார்லிங் படத்தின் மூலம், மற்றும் விஜய் ஆண்டனி 2012ஆம் ஆண்டு நான் படத்தின் மூலம் கதாநாயகர்களாக அறிமுகமானவர்கள். இதில் ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் முதலில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள், பின்னர் நடிகர்களாக மாறினர். சிவகார்த்திகேயனும் தனது சில படங்களில் பாடல்கள் பாடியதோடு, சில பாடல்களுக்கு வரிகள் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.