தொடர்ச்சியாக பல படங்களுக்கு இசையமைத்து இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக தமன் தன்னை நிரூபித்து வருகிறார். சமீபத்தில் பவன் கல்யாண் நடித்த தே கால் ஹிம் ஓஜி படத்திற்கு அவர் இசையமைத்திருந்தார். திரைக்கு வந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதற்கிடையில், இப்படம் வெளியான பின் நடந்த பேட்டியில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் குறித்து தமன் பேசினார். அந்த படத்திற்கு இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டபோது, அவரை கடுமையாக விமர்சித்ததாகவும், “#RemoveThamanFromGunturKaaram” என்ற ஹேஷ்டேக்குடன் எக்ஸில் 67.1 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் வெளிவந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ஏன் இப்படி நடந்துக்கொண்டார்கள் என்று புரியவில்லை என்றும், அந்த விமர்சனங்களை பார்த்தபோது தான் அழுததாகவும் தெரிவித்தார். அந்த நேரத்தில் இயக்குநர் திரிவிக்ரம் தான் மிகுந்த ஆதரவாக நின்று, சமூக ஊடகங்களை விட்டு வேலையில் கவனம் செலுத்தச் சொல்லியதாக தமன் கூறினார்.

