விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஏஸ்’ மற்றும் ‘டிரெயின்’ ஆகிய திரைப்படங்கள் வெளியிற்கு தயாராக உள்ளன. இதற்குப் பிறகு, அவர் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை நடிகை சார்மியுடன் இணைந்து பூரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் நடிகை தபு நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கிய கடைசி இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.

இதைப் பற்றிக் கூறிய விஜய் சேதுபதி, “ஒரு இயக்குநரின் முந்தைய படங்களை வைத்து அவரை மதிப்பீடு செய்யும் பழக்கமில்லை. எனக்கு ஒரு கதை பிடித்திருந்தால், அதில் நடிக்க தயங்க மாட்டேன். இந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த திரைப்படம் முழுமையான ஆக்ஷன் படமாக இருக்கும். இதுபோன்ற கதைக் களத்தில் இதற்கு முன் நான் நடித்ததில்லை. நான் ஏற்கனவே செய்த கதைகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை. புதிய அனுபவங்களை எதிர்நோக்குகிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.