பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு போன்ற பல மொழி படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில், சந்திரமுகி, ஒஸ்தி, தேவி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகராக மட்டும் அல்லாமல், மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வரும் சோனு சூட், தனது சமூகசேவை செயல்களால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், அரசியலுக்கு செல்வது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். “அரசியலுக்கு வந்தால், மக்களுக்கு உதவுவதற்கான ‘சுதந்திரத்தை’ இழக்க நேரிடும்” என்று அவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “நாம் வாழ்க்கையில் பிரபலமடைய தொடங்கும் போது, உயரமான இடங்களில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். எனவே ஒருவர் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலுக்கு சென்றால், உதவுவதற்கான சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்ற பயம் எனக்குள் உள்ளது. அதனால் அரசியலுக்கு போக விரும்பவில்லை. இரண்டு காரணங்களுக்காகவே மக்கள் அரசியலுக்கு செல்கிறார்கள்: ஒன்று பணம் சம்பாதிக்க, மற்றொன்று அதிகாரத்திற்காக. எனக்கு இந்த இரண்டிலும் ஆசை இல்லை. மக்களுக்கு உதவுவதற்காக அரசியலுக்கு வருகிறார்கள் என்றால், நான் ஏற்கனவே அதைச் செய்து வருகிறேன்,” என்றார்.