பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள “ராஜா சாப்” திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவதற்காக தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பிரபாஸ் தற்போது இயக்குனர் ஹனுராகவ புடி இயக்கும் “பாவ்ஜி” எனும் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரமாக இமான்வி (இமான் இஸ்மாயில்) என்பவர் அறிமுகமாகிறார்.

இமான்வி, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், குறிப்பாக ரீல்ஸ் மூலம் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளார். அவரது பரதநாட்டிய ரீல்ஸ் வீடியோக்களால் மெய்சிலிர்த்த ஹனுராகவ புடி, தனது படத்திற்கான கதாநாயகியாக அவரை தேர்ந்தெடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “இமான்வியின் நடனத்தையும், அவரது கண்களின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளையும் பார்த்தவுடன் அவரே இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என நினைத்தேன். முன்பு, இயக்குனர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேட பெரும் சிரமம் இருந்தது. ஆனால், இப்போது சமூக வலைதளங்கள் அதை எளிதாக்கிவிட்டன. பலர் தங்கள் திறமைகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துவதால், அவர்களை கண்டுபிடிக்கவும், தேர்வு செய்யவும் எளிதாகி விட்டது.” என்று தெரிவித்துள்ளார்.