‘ஜப்பான்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள புதிய படம் ‘மை லார்ட்’. இதில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். சைத்ரா ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதைக்களம் குறித்து கூறுகையில், “ஒரு தம்பதியரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தினால், அவர்கள் கையில் இருந்த ரேஷன் கார்டையும் பறித்து எங்கோ கொண்டு நிறுத்தப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதே இப்படத்தின் மையக் கருத்து.
இயற்கை உங்களுக்கு கொடுத்த பெயர் ‘மனுஷன்’, ‘மனுஷி’. பெற்றோர் வைத்த பெயர் வேறு ஒன்று. ஆனால் உணர்ச்சி அற்ற ஒரு சிஸ்டத்துக்குள் நீங்கள் வெறும் எண், டோக்கன், ஓட்டு மட்டுமே. ஆனால் அந்த எண், டோக்கன், ஓட்டு ஒன்று திரும்பி நிற்கும் போது என்ன நடக்கும் என்பதையே ‘மை லார்ட்’ படம் வெளிப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.