தமிழ் திரைப்படங்களுக்கான இசையமைப்பாளராக களமிறங்கிய விஜய் ஆண்டனி, தனது பாடல்களில் புதுமையான, புதிர் போன்ற மற்றும் முன்பு கேட்டிராத சொற்களை பயன்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ‘நான்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், தொடர்ந்து ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, ‘எமன்’ போன்ற வெற்றிப் படங்களை அளித்தார். ‘கொலை’, ‘ரத்தம்’, ‘ஹிட்லர்’ ஆகிய படங்களுக்கு பிறகு சமீபத்தில் வெளியான ‘மார்கன்’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறனுடன் திகழும் விஜய் ஆண்டனி, தற்போது ‘சக்தித் திருமகன்’ படத்தில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த ‘மார்கன்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், விஜய் ஆண்டனியின் 25வது படமான ‘சக்தித் திருமகன்’ படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், விஜய் ஆண்டனி அளித்த ஒரு பேட்டியில், சமீப காலமாக செருப்பு அணியாமல் இருப்பது பற்றி அவர் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “உண்மையைச் சொன்னால், என்னை ‘நல்லவன்’ எனப் பேசுவார்கள். அந்த வகையான புகழை விரும்புவதில்லை. இதை பெருமையாகப் பேசவும் விரும்பவில்லை. விழாக்களில் மாலை, சால்வை, பூங்கொத்து போன்றவை நான் எப்போதும் வாங்க மாட்டேன். என்னை புகழ்வதற்காக எந்த ஒரு செயலும் செய்ய மாட்டேன். நான் பெற்ற வாழ்க்கைக்கு திருப்தியாக இருக்கிறேன். செருப்பு அணியாமல் பூமியின் மேல் நடக்கும் போது, ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. நம் உடலும் பூமியோடும் ஒரு இயற்கைத் தொடர்பு உள்ளது. நான் ஒரு பிரபலம் என்பதால் விமானப்பயணம், ஏசி அறை, பங்களா வீடு போன்ற வசதிகள் விருப்பம் இல்லாவிட்டாலும் கிடைத்து விடுகிறது எனவே, இத்தகைய சிம்பிள் செயல்களில் என் மனதைப் பயிற்றுவிக்கிறேன். வெப்பம் நிறைந்த இடங்களிலும், முள் நிறைந்த காட்டுப் பகுதிகளிலும் செருப்பு அணிகிறேன். மற்ற நேரங்களில் வெறும் காலுடன் நடப்பேன். அதேபோல்‘சக்தித் திருமகன்’ என்பது அரசியல் பின்னணி கொண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இது ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.