விக்ரம் நடித்து, இயக்குநர் அருண் குமார் இயக்கிய ‘வீர தீர சூரன்’ பல சிக்கல்களுக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தொடர்பான ஒரு வழக்கு காரணமாக வெளியீட்டுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து இணையத்தில் பரவும் பல்வேறு தகவல்களுக்கு, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை தயாரித்த ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பி4யு நிறுவனம், ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாகக் கூறி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், திட்டமிட்டபடி நேற்று காலை படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர், இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு, அனைத்து திரையரங்குகளிலும் மாலையில்தான் படம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “‘வீர தீர சூரன்’ படம் வெளியாவதில் தாமதமானதற்கு படக்குழு, விநியோகஸ்தர்கள், ரசிகர்கள், பார்வையாளர்கள், நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் அருண் குமாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படம் தொடர்பாக இணையத்தில் பரவும் சர்ச்சைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது தயாரிப்பாளர்களின் நிதி சிக்கலால் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. ஓடிடி உரிமையாளர்கள் தங்கள் உரிமைகளை திரையரங்கு வெளியீட்டுக்கு முன் விற்க முடியாததால், தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க, கடைசி நேரத்தில் படம் நிறுத்தப்பட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதற்கு கதிரேசன், அருள்பதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி,” என்று பதிவிட்டுள்ளார்.