நடிகை சமந்தாவைப் பொருத்தவரை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது போல இன்று ஒரு பரபரப்பான, பிசியாக இருக்கும் நடிகையாக இல்லாமல், தற்போது வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்துக் கொண்டு வாழவேண்டும் என்ற புதிய வாழ்க்கை முறை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். காதல் திருமணம் முறிந்தது, அதனைத் தொடர்ந்து அவர் சந்தித்த சரும நோய்கள், பின்னர் அவரை தாக்கிய மையோசிட்டிஸ் நோய் — இவையெல்லாம் சேர்ந்து சமந்தாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அந்த மாற்றத்தின் காரணமாக, தற்போது அவர் தேர்ந்தெடுத்த சில படங்களில்தான் நடித்து வருகிறார். அதற்கும் மேலாக, வெப் சீரிஸ் துறையிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், ஆன்மிக பயணங்களும் சுற்றுலா பயணங்களும் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவைச் சுற்றிப்பார்த்து, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சமந்தா. அங்குள்ள கங்காருகள், கோலாக்கள் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றை ரசித்ததும், அதில் ஏற்பட்ட உணர்வுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த ஒரு ரசிகர், இவையெல்லாம் யார் எடுத்தார்கள் என்கிற ஒரு சிநேகிதமான சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார்.
அதற்கான காரணம் சமந்தா, சமீப நாட்களாக ‘பேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்பதால், அவரும் இந்த பயணத்தில் அவருடன் சென்றிருக்கக்கூடும். அதனால், புகைப்படங்களை அவர்தான் எடுத்தாரோ எனும் ஆர்வம் ரசிகரின் கேள்வியில் பிரதிபலித்தது. இதற்கு பதிலளித்த சமந்தா, சிட்னி சுற்றுலா கைடான நவோமி என்பவர்தான் இந்த புகைப்படங்களை எடுத்தார் எனத் தெளிவாகச் சொன்னதின் மூலம், ரசிகரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.