மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான ‘எம்புரான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் பாகமான ‘லூசிபர்’போன்று, இது மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வசூலில் ஒரு அளவுக்கு மட்டும் சாதித்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய தவறியது.

இந்த சூழலில், மோகன்லாலின் அடுத்த படம் ‘தொடரும்’ வரும் ஏப்ரல் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘ஆபரேஷன் ஜாவா’ என்ற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வந்த தருண் மூர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார்.நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, ஷோபனா இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் சில வெளியானபோது, ரசிகர்கள் இது ‘திரிஷ்யம்’ படத்தை போன்ற ஒரு பாணியில் இருக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் இயக்குநர் தருண் மூர்த்தி கூறுகையில், “இது ‘திரிஷ்யம்’ போல ஒரு திரில்லர் படம் அல்ல. அதே நேரத்தில் இது ஒரு பீல் குட் (Feel Good) படம் கூட அல்ல. மேலும், இது ஒரு மிஸ்டரி அல்லது இன்வெஸ்டிகேஷன் படம் என்று கூட சொல்ல முடியாது. இது ஒரு குடும்பநிலையைக் கொண்ட டிராமா. ஆனால், இரண்டாம் பாதியில் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் விறுவிறுப்பான சம்பவங்கள் இடம்பெறும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் சில நாட்களில் நடந்த நிகழ்வுகள், அவனை எப்படி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன என்பதை நகைச்சுவை, சோகம், அதிர்ச்சி மற்றும் த்ரில் கலந்து கூறியிருக்கிறேன்,” என்றார்.