இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்து வெளியான படம் ‘ஆர்யன்’. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் முதல் 3 நாட்கள் நன்றாக இருந்தது. மேலும், இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமமும் விற்கப்பட்டு விட்டதால் விஷ்ணு விஷாலுக்கு லாபகரமான படமாகவே ‘ஆர்யன்’ அமைந்தது.

இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இதில் “ஒரு படத்தின் கதையில் நாயகனாக அல்லது தயாரிபபாளராக எதில் தலையிடுவீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷ்ணு விஷால், “நான் தலையிடாத அனைத்து சினிமாவும் வெற்றியடைவது இல்லை. சினிமாவை பொறுப்புணர்வுடன் பார்க்கிறேன். எனது தயாரிப்பு மட்டுமல்ல, நடிகனாகவும் என்னுடைய பொறுப்பு இருப்பதாக நம்புகிறேன்.
ஏனென்றால் இயக்குநருக்காக மட்டும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதில்லை. படம் பார்க்கும் போது நடிகரைத் தான் திட்டுகிறார்கள். அப்படியிருக்கும் போது அதை பொறுப்புடன் செய்ய வேண்டும். எந்த தயாரிப்பாளர், இயக்குநராக இருந்தாலும் போய் கதையில் உள்ள மாற்றங்களைச் சொல்வேன். அப்படியிருப்பதால் மட்டுமே இப்போது வரை எனது பெரும்பாலான படங்கள் வெற்றியடைந்து இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுப்பதால், புதிய தயாரிப்பாளர்களுக்கு உங்களது அட்வைஸ் என்ன” என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “யாருக்கும் அட்வைஸ் சொல்ல வேண்டாம். எனது பரிந்துரை வேண்டுமானால் நடிகர்களுக்கு சொல்கிறேன். கொஞ்சம் சம்பளம் குறைவாக வாங்கச் சொல்வேன். அப்படியிருந்தால் மட்டுமே படத்தின் உருவாக்கத்திற்கு செலவு செய்ய முடியும்” என்று பதிலளித்துள்ளார்.

