சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் குறும்படப் பிரிவில் ஒளிப்பதிவு பிரிவுக்கான விருதாக 2022 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘லிட்டில் விங்ஸ்’ தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை மீனாட்சி சோமன் மற்றும் சரவணமுத்து சவுந்தரபாண்டி பெறவுள்ளனர். ஏற்கனவே சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் 12 விருதுகளை வென்றிருந்த இந்த படம், இப்போது தொழில்நுட்ப பிரிவிலும் தேசிய விருது வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு, ‘லிட்டில் விங்ஸ்’ படத்தின் இயக்குநர் நவீன்குமார் முத்தையா சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரது சினிமா பயணம் அனுபவங்களை குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், சென்னை எம்.சி.ஏ., படிப்பதற்காக வந்தேன். அந்தக் காலத்தில் நான் படித்த நூல்களும், சர்வதேச விருது பெற்ற திரைப்படங்களும் எனக்குள் சினிமா மீதான ஆர்வத்தை அதிகரித்தன. முதலில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்திலும் பின்னர் ‘ஜிப்சி’ படத்திலும் பணிபுரிந்தேன். தற்போது இயக்குநர் மணிரத்னத்திடம் வணிகரீதியான சினிமா கற்றுக்கொண்டு வருகிறேன். ஆரம்பத்தில் சினிமாவுக்குள் வரவேண்டும் என்ற ஆர்வத்தில் நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் இப்போது சினிமா என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டது. சினிமா என் வாழ்க்கை முறையாக மாறுவதற்கு இலக்கியமும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இயக்குநர் மணிகண்டன் இயக்கிய ‘விண்ட்’ குறும்படம் எனக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தாக்கமே ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. கந்தர்வன் எழுதிய ‘சனிப்பிணம்’ என்ற கதையைப் படித்து அதனை குறும்படமாக மாற்ற முடிவு செய்து ‘லிட்டில் விங்ஸ்’ எடுத்து முடித்தேன். பின்னர் கனடாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய திரைப்படப் போட்டியில் எனது திரைக்கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. ஆனால் அந்தப் பரிசை அடுத்த படம் எடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கினர். அதன் பின் இயக்குநர் ராஜமுருகனின் உதவியுடன் ‘லிட்டில் விங்ஸ்’ உருவானது. இதுவரை இந்த படம் 12 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாகவும் தேர்வானது. கூடவே ஆஸ்கார் விருது பெற்ற படங்களுடன் போட்டியிட்டது. ஆனால் வருத்தமாகச் சொல்ல வேண்டியது என்னவெனில், தமிழில் இதைப் பற்றி யாரும் கவனம் செலுத்தவில்லை.
இதுவரை இந்த படம் சிறந்த படத்திற்கும், சிறந்த நடிப்பிற்கும் மட்டும் விருது பெற்றிருந்தது. ஆனால் இப்போது தொழில்நுட்ப பிரிவிலும் விருது கிடைத்திருப்பதால் எங்கள் உழைப்பு வீணாகப் போகவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘லிட்டில் விங்ஸ்’ படம் நேரடி ஒளிப்பதிவு முறையில் எடுக்கப்பட்டது. இந்தப்படத்தில் கேமரா இருப்பது தெரியாமல் படமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கதாபாத்திரம் உட்காரும் போதும், நடக்கும் போதும் கேமராவையும் அதற்கேற்ப நகர்த்த வேண்டும். இல்லையெனில் கேமரா ஒருவிதமான கண்காணிப்பு போல் தோன்றும். கதாபாத்திரங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதே கேமராவும் அதன் உணர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது. ‘லிட்டில் விங்ஸ்’ படத்தில் இத்தகைய தனித்துவமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
திரை இலக்கணம் இலக்கியத்திற்குப் போலவே சினிமாவிலும் குறும்படத்தை கவிதையுடன் ஒப்பிடலாம். வேறு வேறு பாணியில் கதை சொல்லும் தளமாக குறும்படம் அமைகிறது. சினிமாவில் நேரம் மிகவும் முக்கியமானது. கதையை ரப்பர் பேண்ட் போல் அதிகமாக இழுத்தால் அது உடைந்து விடும். ஒரு கருவை குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே விரிக்க முடியும் என்பதைக் கணக்கிட்டு வேலை செய்தால்தான் குறித்த நேரத்தில் படத்தை முடிக்க முடியும். காட்சியை எழுதி முடித்த பிறகு அதற்கான நேரத்தைக் கணக்கிடுவோம். ‘லிட்டில் விங்ஸ்’ படத்தை 25 நிமிடங்களில் எடுக்கத் திட்டமிட்டோம், ஆனால் 20 நிமிடங்களில் முடித்து விட்டோம். தமிழ் சினிமா சர்வதேச அளவுக்கு செல்லாததற்கு காரணம் நமது நோக்கம் மிகச் சுருங்கிப்போனதுதான். பலர் குறும்படம் எடுத்து விட்டால் தயாரிப்பாளர்களிடம் காட்டி சினிமாவுக்குள் நுழையலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.
தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை திரைக்கதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு கதை அறம், அன்பு, துரோகம் போன்ற ஏதாவது ஒன்றைக் கூறும். எழுத்தாளரின் நுட்பத்தையும் உண்மையையும் எடுத்துக் கொண்டால் எந்தக் கதையையும் சிறப்பாகச் சொல்ல முடியும். ஒரு கதை சொல்லப்பட வேண்டுமென்றால் அது தானாகவே நம்மை கருவியாக பயன்படுத்திக் கொள்ளும். அப்படிப்பட்ட ஒரு கதைக்காகவே காத்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.