ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘பிளாக்மெயில்’. இதில் தேஜூ அஸ்வினி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தில் நடித்த அனுபவம் குறித்து தேஜூ கூறியதாவது, ‘படாக் படாக்’ எனும் பாடலில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து நான் நடனமாடினேன். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நாங்கள் இருவரும் ரசிகர்களிடையே ஒரு ‘வைரல் ஜோடி’யாக மாறினோம். எங்கள் ஜோடியின் ஒத்துபோகும் தன்மையை அனைவரும் பாராட்டினர். அதனால் தான் இந்த பட வாய்ப்பு எனக்கு வந்தது. முன்னதாக இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் எனக்கு தனியான அடையாளத்தை வழங்கும் என நம்புகிறேன்” என்றார்.

மேலும், “பொதுவாக நடிப்பைத் தாண்டி புதிய முயற்சிகளுக்காக இந்த படம் ஒரு வாய்ப்பைத் தந்தது. இது எனக்கு புதுவிதமான அனுபவமாக அமைந்தது. இயக்குநர் மு. மாறன் தனது முந்தைய படங்களான ‘கண்ணை நம்பாதே’ மற்றும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ போன்றவற்றில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தார்.
அதேபோல், ‘பிளாக்மெயில்’ படத்திலும் எனக்கான வேடம் மிக முக்கியமானது என்ற நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்டேன். இதற்கு முன் ஜிவி பிரகாஷுடன் கலர்புல்லான ஒரு மியூசிக் வீடியோவில் பணியாற்றியிருந்ததாலும், அந்த அனுபவம் இந்த வாய்ப்புக்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.