நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத் தொழில்நுட்பப் பணிகள் தற்போது முடிவின் கட்டத்தை எட்டியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 26-ஆம் தேதி இந்த பணிகளை நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி நேரில் சென்று பார்வையிட்டனர். அதையடுத்து, கட்டடத்தில் அமைக்கப்பட்ட விநாயகர் கோவிலில் அவர்கள் இருவரும் பூஜை செய்து வழிபாடுகளை செய்தனர்.இந்த புதிய கட்டடம் பல்வேறு வசதிகளை கொண்டதாக உருவாகி வருகிறது. இதில் திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்புப் பயிற்சி பள்ளி உள்ளிட்ட அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஷால் கூறியதாவது: “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டட திறப்பு விழாவை ஆகஸ்ட் 15ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் இந்த நடிகர் சங்க கட்டடம் திறக்கப்படும். இந்த புதிய கட்டடப் பணிகள் ஜூலை மாதத்தில் முழுமையாக முடிவடையும். நீங்கள் அனைவரும் அந்த விழாவிற்கு வரவேண்டும், வாழ்த்தவேண்டும்.
அதன் பின்னரே என் திருமண விழா இருக்கும். இந்தக் கட்டடம் உங்களுக்காக கட்டப்பட்ட ஒரு கட்டடம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த திரையுலகத்திற்காக உருவாக்கப்பட்ட கட்டடமாகும். அந்த விழாவில் அம்மாக்கள், பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான முகத்துடன் வர வேண்டும். விழா நடைபெறும் நாளில் வாசலில் நானே நின்று அனைவரையும் வரவேற்க உள்ளேன்,” என்று கூறினார்.