இந்திய சினிமாவில் ‘பான் இந்தியா’ என்ற கருத்தை பிரபலமாக்கிய திரைப்படம் ‘பாகுபலி 2’ ஆகும். அதன் வெற்றிக்குப் பிறகு, பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டு ‘பான் இந்தியா’ படங்களாக அழைக்கப்பட்டன. அவை உலகளவில் பெரும் வசூலை ஈட்டினாலும், ‘பான் வேர்ல்டு’ என அல்லாமல் ‘பான் இந்தியா’ என்றே குறிப்பிடப்பட்டன.

இந்தநிலையில், ‘வேவ்ஸ் 2025’ மாநாட்டில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லியுடன் இணைந்து உருவாகும் தனது 22வது படத்தை ‘பான் வேர்ல்டு’ படமாக உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார். “’ஜவான்’ மற்றும் தென்னிந்திய சினிமாவில் பல ஹிட் படங்களை அளித்த அட்லி என்னிடம் கூறிய கருத்துகள் மற்றும் அவருடைய கனவுகள் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தன. எங்கள் இருவருக்கும் உள்ள ஒத்த பார்வை மூலம் இந்தப் படம் இந்திய சினிமாவிற்கு புதிய கோணத்தில் சர்வதேச அளவில் ஒரு அசத்தலான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். இது இந்தியக் கலாசாரத்தை பிரதிபலிக்கும் உலக திரைப்படமாக உருவாகும்,” என அவர் கூறினார்.
இந்த புதிய முயற்சிக்கான அடுத்த கட்டமாக கதாநாயகிகள் மற்றும் மற்ற கதாப்பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தைப் பற்றிய மேலும் அறிவிப்புகள் வெளியாகலாம்.