மலையாள நடிகை பார்வதி கடந்த 20 வருடங்களாக மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ந்து மாறி மாறி நடித்து வருகிறார். எப்போதுமே தரமான கதைகளையும் சவாலான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதால், அதிகளவில் செலக்டிவ்வான படங்களில் மட்டுமே அவரை காண முடிகிறது. இதற்கிடையில், மலையாள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பிற்கும் தொழிலாளி உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.
சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையின் வெளியீட்டிற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி உள்ளிட்ட பல நடிகைகள் இணைந்து உருவாக்கிய சினிமா பெண்கள் நல அமைப்பு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த அமைப்பின் வழியாக சினிமா துறையில் பெண்களுக்கு சிறியதாயினும் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை உறுதிப்படுத்த அவர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் வயநாட்டில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் பார்வதி கலந்து கொண்டு பேசும்போது, “படப்பிடிப்பிற்கு செல்லும்போது அங்கு பெண்களுக்குப் போதிய பாத்ரூம் வசதி இல்லை என்பதைக் கவனிப்பேன். இதனால், படம் தொடர்புடையவர்களிடமும் நடிகர் சங்கத்திடமும் முக்கியமான படப்பிடிப்பு தளங்களில் நிரந்தர பாத்ரூம் வசதியை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுப்பேன். இதனால், சில நடிகர் சங்க நிர்வாகிகள் என்னை ‘பாத்த்ரூம் பார்வதி’ என்று கிண்டலடிப்பார்கள். சில படங்களில் பணியாற்றியவர்களிடமிருந்து இது குறித்த தகவல் எனக்கு தெரிந்தது,” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.