நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் திரைப்படம் அக்.17 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து மாரி செல்வராஜ், “பைசன் என் திரைவாழ்வில் முக்கியமான படம். மிகவும் கனமான, சிக்கலான கதையைச் சொல்லியிருக்கிறேன். அந்தக் கதையை சொல்லும் முயற்சியில், கதையே எனக்கு பக்குவத்தையும் ஆழ்ந்த அனுபவத்தையும் அளித்தது. மக்கள் இப்படத்தைப் பார்ப்பதன் மூலம் ஒரு மாற்றம் நிகழும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை, தென் தமிழக இளைஞர்களின் பதற்றமான சூழல்கள், இயக்குநரின் சொந்த அனுபவங்கள் இணைந்துள்ளன. இந்தக் கதைக்கு தனது உடல், நேரம், மனதை முழுமையாக அர்ப்பணித்த துருவ் விக்ரமைப் பற்றி அவர், “படம் தொடங்கிய சில நாட்களிலேயே அவனுக்கு கடினமாக இருந்தது. ஆனால் ‘நீங்கள் இந்தப் படத்தை கனவாகக் கொண்டுள்ளீர்கள், உங்களை அப்பா மாதிரி நினைத்து வருவேன், என்னைப் பார்த்துக்கொள்வீர்கள் என்று நம்புறேன்’ என்று சொன்னது என்னை உருக்கியது. அதற்குப் பிறகு அவனை பாதுகாப்புடன் வைத்து, கடினமான பயிற்சிகளில் மூழ்கவைத்தேன். இரண்டு வருடங்கள் உழைத்து, முழுமையாக கபடி வீரராக மாறியிருக்கிறார். இது பல நடிகர்கள் செய்யாத விஷயம்” என்றார்.
மேலும், “படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் ‘நீ நினைத்ததை சாதித்துவிட்டாய், துருவின் சினிமா வாழ்க்கை இங்கிருந்தே துவங்குகிறது’ எனச் சொன்னார்கள். அது எனக்கும், துருவுக்கும் மகிழ்ச்சி அளித்தது. அதையே மக்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறினார்.