தொடர்ச்சியாக முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் பூஜா ஹெக்டே தற்போது தனது கைவசம், விஜய் நடிப்பில் உருவாகும் ‘ஜனநாயகன்’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இதற்கு மேலாக ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் ‘காஞ்சனா’ படத்தின் நான்காவது பாகத்திலும் அவர் நடித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஹிந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக ஒரு தலைப்பிடப்படாத புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை பூஜா ஹெக்டே, தன்னை பற்றிய ட்ரோல்கள் குறித்து நேர்மையாகவும் திறந்த மனதுடன் பேசுகிறார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், “நான் என்னை குறித்து வருகிற ட்ரோல்களைப் பார்க்கும்போது சில சமயங்களில் அதிர்ச்சி அடைகிறேன். பிஆர் (பப்ளிக் ரிலேஷன்ஸ்) விஷயங்களில் நான் பலவீனமாக இருக்கிறேன் என்பது உண்மை. ஒரு கட்டத்தில், பல மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்துக் கொண்டிருந்தன. நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என்னை மட்டும் இப்படி தொடர்ந்து நெகட்டிவாக காட்டுகிறார்கள் என்று நான் ஆழமாக யோசித்தேன். அவர்கள் மிக ஸ்பெசிஃபிக்காக என்னை குறிவைத்து தான் ட்ரோல் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

பிறகு எனக்கு ஒரு உண்மை தெரிந்தது — சிலரைக் கீழ்த்தரமாக காட்ட ஒரு சில குழுக்கள் நிறைய பணத்தை செலவழிக்கிறார்கள் என்பதையே. அந்த உண்மையை அறிந்தபோது என் பெற்றோரும் நானும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டோம். ஆனால் அந்த நிலைமையையே நான் ஒரு விதத்தில் பெருமையாக எடுத்துக் கொண்டேன். ஏனெனில் யாராவது உங்களைத் தொடர்ந்து குறைத்து பேச விரும்புகிறார்கள் என்றால், நீங்கள் அவர்களைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதற்கான சான்றாக இருக்கிறது. அந்த நேரத்தில் ‘பிரச்சனை எதுவும் இல்லை’ என்று என் பெற்றோரிடம் நானே அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு இது எல்லை மீறிவிட்டது. என்னை ட்ரோல் செய்யவே சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கிறார்கள் என்பது எனக்குத் தெளிவாகி விட்டது.”
அதன்பிறகு, “என்னை தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த சில முக்கிய மீம் பக்கங்களை என் குழு அணுகும்படி நான் கூறினேன். அந்த குழுவிடம், ‘என்ன பிரச்சனை? ஏன் இப்படி ட்ரோல் செய்கிறீர்கள்?’ என்று கேட்கும்படி சொன்னேன். அதற்காக அவர்கள் கொடுத்த பதில் மிகவும் நேரடியாகவும் வியப்பூட்டும் வகையிலும் இருந்தது. அவர்கள் சொன்னது, ‘உங்களை ட்ரோல் செய்ய எங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இதை நிறுத்தவேண்டும் அல்லது அந்த டீமை தாங்களே ட்ரோல் செய்யவேண்டும் என்றால், நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?’ என்று கேட்டார்கள். இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்னும் கூட, என்னை ஏன் ட்ரோல் செய்கிறார்கள்? இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன? என்பதைப் பற்றி எனக்கு இதுவரைக்கும் தெளிவாகத் தெரியவில்லை,” என்று பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார்.