மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை சுவேதா மேனன். இவர் பணம் சம்பாதிக்க ஆபாசமாக நடித்து லாபம் ஈட்டியதாக கூறி, கொச்சியைச் சேர்ந்த ஒருவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நடிகை சுவேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கொச்சி மத்திய காவல்துறையினர், இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக, சுவேதா மேனன், தன்னுடைய மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனும் கோரிக்கையுடன் எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைப் பற்றி சுவேதா மேனன் கொச்சியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது, “மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் (அம்மா) தலைவர் பதவிக்காக நான் போட்டியிடுகிறேன். எனவே எனக்கு எதிராக ஒரு குழு திட்டமிட்டு சதி செய்து, இந்த வழக்கை உருவாக்கி இருக்கின்றனர். இந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன். என்னை எதிர்த்துச் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபிக்க உள்ளேன். இதற்காக என் சார்பில் நியாயமான விளக்கத்துடன் கூடிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன்” என கூறினார்.