தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராகவும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டை முன்னிட்டு, நேற்று இரவு ஹைதராபாத்தில் ஒரு சிறப்புவிழா நடைபெற்றது. அந்த விழாவில் பவன் கல்யாண் கலந்துகொண்டு உரையாற்றிய போது, தனது ரீமேக் படங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார்.

ரீமேக் படங்களில் நடிப்பதற்காக மக்கள் என்னை விமர்சிக்கிறார்கள். நம்மிடம் அதிகளவில் திறமையான இயக்குநர்கள் இல்லை. பலரும் என்னை விரைவில் பணம் கொண்டு வரக்கூடிய நடிகராகவே பார்க்கின்றனர். நான் ரீமேக் படங்களில் நடிக்கவில்லை என்றால், என் கட்சிக்காக பணம் எங்கிருந்து வரும்? என் குடும்பத்தை யார் பார்ப்பார்கள்?
ரீமேக் படங்கள் என் அரசியல் பயணத்திற்காக தேவையான நிதியைத் திரட்ட ஒரு எளிய வழியாக மாறின. நான் ஒரு தவறு செய்தேன், அதனால் தோல்வி கண்டேன். அதன் பிறகு தொழிலில் எனது பிடியை இழந்தேன். ஆனால் பின்னர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் எனது வாழ்க்கையில் மீண்டும் வந்து ‘ஜால்சா’ படம் மூலம் வெற்றியை அளித்து, என்னை மீண்டும் உயர்த்தினார். நான் பயத்தால் அல்லது திறமையின்மையால் அசல் கதைகளை தவிர்க்கவில்லை. நடைமுறைத் தேவைகளால், எனது அரசியல் பயணத்திற்கு தேவையான நிதி திரட்டுவதற்காகவே ரீமேக் படங்களில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.