துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள “காந்தா” திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எம். கே. தியாகராஜ பாகவதரின் உறவினர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, தயாரிப்பு நிறுவனங்கள் நவம்பர் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பட வெளியீடு குறித்த குழப்பம் உருவாகிவந்த நிலையில், சமூக வலைதளமான எக்ஸில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நடிகர் ராணா, “காந்தா” படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அவர், அந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இப்படம் எந்த உண்மையான நபரின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இது முழுக்க கற்பனை கதை. அனைவரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்கில் வந்து படம் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் என்று தெளிவுபடுத்தியுள்ளார் ராணா.

