1984ஆம் ஆண்டு, ஹிந்தி சினிமாவில் தனது கதாநாயகி பயணத்தைத் தொடங்கிய மாதுரி தீக்சித், இதுவரை 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பத்ம பூஷன் விருதை பெற்றுள்ள இவர், 1999ஆம் ஆண்டு மருத்துவர் ஸ்ரீராமை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.அண்மையில், ‘பூல் புலையா 3’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர், 57 வயதிலும் இணையதள வெப் தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மாதுரி தீக்சித், பாலின சமத்துவம் குறித்துப் பேசும் போது, “பெண்கள் எப்போதும் தங்களை நிரூபிக்கத் தொடர்ந்து வர வேண்டும். ஆண்களுக்கு இணையாக நாங்கள் பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என்பதை ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உண்மையில், சினிமா துறையில் பாலின பாகுபாடு உள்ளது. குழந்தை நடக்க பழகுவதுபோல், படிப்படியாக பொறுமையுடன் முன்னேற வேண்டிய சூழ்நிலை உள்ளது.”
மேலும், “பாலின பாகுபாடு இல்லை என உறுதிபடுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அந்த நோக்கத்தை அடைய, தினமும் கடினமாக உழைத்து வருகிறோம். இன்றுவரை, பெண்களுக்கான சம்பளத்தில் கூட பெரும் பாகுபாடு உள்ளது. ஆனால், இதற்காக பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எப்போதும் பெண்களையே நோக்கி திருப்பப்படுகிறததை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். உண்மையில், இந்த விவகாரத்தில் நடிகர்களே (ஆண் நடிகர்கள்) பதிலளிக்க வேண்டும் என்பதே என் கருத்து.” என தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.