மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) பாடத்திட்டங்களை உருவாக்கும் பொறுப்பில் உள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் வெளியிட்ட 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களை நீக்கியது. இதற்கான எதிர்ப்பு பல்வேறு வட்டாரங்களில் எழுந்தது.

இந்தச் சூழ்நிலையில் நடிகர் மாதவன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, பள்ளியில் வரலாறு படிக்கும் போது, முகலாயர்கள், ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகங்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திரப் போராட்டம் போன்ற தலைப்புகள் பற்றிய பல அத்தியாயங்கள் இருந்தன. ஆனால் சேர, சோழ, பாண்டியர் போன்ற தமிழரசர்களைப் பற்றியவையாக ஒரு அத்தியாயம் மட்டுமே இருந்தது எனக் குறிப்பிட்டார்.
அவரது கருத்துப்படி, ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் சேர்ந்து நம்மை 800 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கலாம். ஆனால் சோழப் பேரரசு 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நம்முடைய வரலாற்றின் அந்த முக்கியமான பகுதி எங்கே? தமிழ் மன்னர்களின் வீர வரலாறு ஏன் இல்லாமல் போனது? உலகின் மிகப் பழமையான மொழியான தமிழைப் பற்றியும், நமது பண்பாட்டில் இருக்கும் அறிவியல் அறிவைப் பற்றியும் யாரும் அறியாத அளவுக்கு மறைக்கப்பட்டு விட்டது. இப்போது அந்த அறிவே கேலிக்குரியதாக பார்க்கப்படுகிறது என அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.