ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ் மற்றும் சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இதற்கான பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்கக் கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரவிருக்கும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலாக ‘சிக்கிட்டு’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை அறிவு, அனிருத் மற்றும் டி. ராஜேந்தர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. மேலும், ‘சிக்கிட்டு’ பாடலுக்கான படப்பிடிப்பு காட்சிகளின் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
அனிருத் இந்த பாடல் குறித்து கூறுகையில், “சிக்கிட்டு பாடலுக்கான வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவை முதன்முறையாகப் பார்த்ததும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம். பல வருடங்களுக்கு பிறகு ரஜினி சார் இந்த மாதிரியான கெட்டப்பில் திரையில் தோன்றுகிறார். ரஜினி சார், எப்போதும் ஷூட்டிங்குக்கு முன் பாடல்களை கேட்பதில்லை. ஆனால், இந்தப் பாடலுக்கான முதல் நாள் ஷூட்டிங்குக்குப் பிறகு அவருக்குப் பாடல் மிகவும் பிடித்ததாகக் கூறினார் என தெரிவித்துள்ளார்.