ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த், தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் அறியப்படும் ஆளுமை. இவர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம், பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது.

இந்த படம் என்கவுன்டர் சம்பவங்களை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ரஜினிகாந்த் ஒரு போலீஸ் அதிகாரியாகவும், அமிதாப் பச்சன் ஒரு வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்கள் இருவரும் ஒன்றாக நடித்ததால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் நடித்திருப்பதால், ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்கில் ஆர்வத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் படத்தை பார்த்து மகிழ்ந்தார். கார்த்திக் சுப்பராஜும் இன்று காலை கமலா திரையரங்கில் கண்டு மகிழ்ந்தார். படக்குழுவினர் ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் கண்டு மகிழ்ந்தனர். இதில் ரித்திகா சிங், அபிராமி, ரஜினிகாந்தின் மனைவி, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


இந்த படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பகத் பாசில், ராணா, கிஷோர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு நகர்ந்து செல்கின்றன. துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்த ‘வேட்டையன்’ படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதால், இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.