மலையாளத் திரைப்பட உலகில் ‘ரெட் ரெயின்’ என்ற திரில்லர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராகுல் சதாசிவன். இவரது இயக்கத்தில் மம்முட்டி நடித்த 2024 ஆம் ஆண்டு வெளியான ‘பிரமயுகம்’ என்ற ஹாரர் திரைப்படம், வித்தியாசமான கதை மற்றும் காட்சியமைப்பால் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை தயாரித்த நிறுவனம் மீண்டும் ராகுல் சதாசிவனுடன் கைகோர்த்து புதிய படத்தை தயாரித்துள்ளது. இந்த புதிய படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25ஆம் தேதி துவங்கி, ஒரே மாதத்தில் நிறைவடைந்தது. திகிலாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ‘டைஸ் ஐரே (Dies Irae)’ என பெயரிடப்பட்டுள்ளது. “டைஸ் ஐரே” என்ற சொல் 13ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு லத்தீன் தேவாலயப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்; அதில் “ஆன்மாக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு சொர்க்கமோ நரகமோ அனுப்பப்படும் இறுதித் தீர்ப்பு நாள்” என்பதைக் குறிக்கிறது.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

