ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அவதார் – பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம், சாம் வொர்த்திங்டன், ஸோ சல்டானா, சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தியாவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மொழியிலும் தனித்தனி டிரெய்லர்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக, மிகத் தனிப்பட்ட விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட டிரெய்லர் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
2009 ஆம் ஆண்டு ‘அவதார்’ எனும் வரிசையின் முதல் திரைப்படம் வெளியாகி உலகளவில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டியது. பின்னர், 2022ஆம் ஆண்டில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ எனும் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால், அது முதல் பாகம் எட்டிய வசூல் சாதனையை முறியடிக்க முடியவில்லை. தற்போது, இந்த வரிசையின் மூன்றாவது பாகமான ‘அவதார் – பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்குப் பின்னர் ‘அவதார் 4’ படம் 2029ஆம் ஆண்டு மற்றும் ‘அவதார் 5’ படம் 2031ஆம் ஆண்டு வெளிவர உள்ளது.
‘அவதார் – பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தொடங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிவடைந்ததும், அதன் பின்னர் தொடர்ந்த ஐந்து ஆண்டுகள் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.