இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள கொம்பு சீவி படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார். மேலும், மற்றொரு முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமாரும், நாயகியாக தார்னிகாவும் நடித்துள்ளனர். தார்னிகா, ‘நாட்டாமை’ திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் மகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டுஉசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதிகளில் நடந்த உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் நிறுவனம், சமீபத்தில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது. அதன்பின் இப்படத்தின் டீசரும் ரசிகர்களிடம் அறிமுகமானது.
இந்நிலையில், ‘கொம்புசீவி’ படத்தின் முதல் வீடியோ பாடலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ‘உன்ன நான் பாத்தா’ எனும் பாடலை, யுகபாரதி எழுதிய வரிகளில், யுவன் ஷங்கர் ராஜா தனது குரலில் பாடியுள்ளார்.

