தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றை உருவாக்கும் விதமாக “அகத்தியா” படக்குழு இரண்டு அற்புதமான புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “அகத்தியா கேம்” மற்றும் இரண்டாவது சிங்கிள் “என் இனிய பொன் நிலாவே” பாடல் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட திரைப்படம் வரும் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய அளவிலான வெளியீடாக திரையரங்குகளில் திரையிடப்படும்.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு விளையாட்டு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. “அகத்தியா” படத்தின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் எனும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினருக்கும் ஏற்றதான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு, படத்தின் கதையின் பின்னணியையும் கதைக்களத்தின் தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில், முழுமையான அனுபவத்தை வழங்குகிறது. இதன்மூலம், படம் பற்றிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது.
இந்த விளையாட்டின் இணை தயாரிப்பாளரான அனீஷ் அர்ஜுன் தேவ் இதுகுறித்து கூறியதாவது: இந்த கேம் அனைவருக்கும் எளிதாக விளையாடக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், முதல் முறையாக விளையாடுபவர்கள் கூட சிரமமின்றி இந்த கேமிங் அனுபவத்தை அனுபவிக்க முடியும். ஜீவா மற்றும் அர்ஜுன் போன்ற ஏஞ்சல்ஸ் கதாபாத்திரங்கள் மற்றும் எட்வர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் போன்ற டெவில்ஸ் கதாபாத்திரங்களுடன், இந்த விளையாட்டு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும். அதே நேரத்தில், ‘அகத்தியா’ திரைப்படத்தின் தனித்துவமான கதைக்களத்தையும் விளக்குகிறது” என்று கூறினார்.