இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி ‘டி.என்.ஏ’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ் மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளிவந்த ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் வெங்கடேசன், அதன் பின்னர் ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘பர்ஹானா’ போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்த ‘டி.என்.ஏ’ திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘சித்தா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நிமிஷா சஜயன், இதில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் அதர்வா முரளியின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
‘டி.என்.ஏ’ திரைப்படம் ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் சிறப்பம்சமாக, இதில் இடம்பெறும் ஐந்து பாடல்களும் ஐந்து வேறுபட்ட இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, ‘டி.என்.ஏ’ திரைப்படம் இந்த மாதம் 20-ஆம் தேதி திரையிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.