மிர்ச்சி சிவா மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்குநர் ராம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் ராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “எங்களுடைய ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பாடல், சூரியகாந்தி பூந்தோட்டத்தை பின்னணியாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலில் ஒரு அப்பாவின் பால்யமும் அவரது மகனின் பால்யமும் ஒன்றிணையும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மதன் கார்க்கி எழுதிய பாடல்வரிகளில், விஜய் யேசுதாஸ் பாடியிருப்பதுடன், இசையமைப்பை சந்தோஷ் தயாநிதி செய்துள்ளார்.
ஜூலை 4ஆம் தேதி ‘பறந்து போ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது, ஊரெங்கும் சூரியகாந்தி பூக்கள் பூத்திருக்கும். அந்த சூரியகாந்தி பூக்களோடு இணைந்து ‘பறந்து போ’ திரைப்படத்தை பார்க்க வாருங்கள். இந்த படத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் சில சிறிய குழந்தை நட்சத்திரங்களும் உங்களை காத்திருக்கின்றனர்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாகியிருக்கின்றதால், தற்போது முதலில் திரையரங்குகளில் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.