நடிகர் விமல் நடித்த “சார்” திரைப்படம் வெளியானபின், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட் மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்தனர். பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
அதன் பின்னர், நடிகர் விமல் நிருபர்களிடம் பேசியதாவது: “‘சார்’ திரைப்படத்தின் வெற்றி என்னை மிகவும் மகிழ்விக்கின்றது. இப்படத்தை போன்ற சிறிய படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறைக்கு ஊக்கமாக இருக்கும். திரையரங்கு மற்றும் ஓடிடி இரண்டும் வெவ்வேறானவையாக இருந்தாலும், இரண்டிற்கும் முக்கிய பங்குள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றியைப் பெறுகின்றன. விஜய் மாநாட்டில் விஷால் செல்வது வரவேற்கத்தக்கது. எனக்கு படப்பிடிப்பு இருப்பதால், மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது” என்று கூறினார்.
இயக்குனர் போஸ் வெங்கட் கூறுகையில், “சிறிய படங்களுக்கு வெற்றி பெற நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால், முதல் மூன்று நாட்கள்தான் முக்கியம். அதன் பின் திரையரங்குகள் பொறுமை காக்க முடியாமல் நல்ல படங்களும் வெளியேறுகிறது. ‘லப்பர் பந்து’, ‘சார்’ போன்ற படங்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. வார இறுதி நாட்களையும் தாண்டி, தொடர்ந்து மக்கள் ஆதரவு பெற்றதால் படத்தை வெற்றி பெற்றிருக்கிறது” என்று கூறினார்.