ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தில் அஜித் மூன்று வேறுபட்ட கதாபாத்திரங்களில் மாஸாக நடித்துள்ளார். அவருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரவிருக்கும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான பின்னர், அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அஜித், இதுவரை நாம் பார்த்திராத புதிய தோற்றங்களில் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ, இன்று மாலை வெளியிடப்பட்டது. முழு பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பாடலுக்கு “OG Sambavam” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஜி.வி. பிரகாஷுடன் சேர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பாடியிருப்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.